படம் பார்த்து கவிதை சொல் !!

என் ஆபரணம் உனக்கு வேண்டுமோ

என் அழகு கண்டு மயக்கமோ

என்னைகண்டு கூச்சலிடும் பெண் புறாவே

எம் கதை கேள் அன்னமே !!



நீள் கூந்தல் பின்னி முடிந்து

மனம் கமழும் பூ சூடி

புது பட்டாடை சூழ்ந்து நிற்க

வலைகரங்களும் ஜிமிக்கியும் கதை பேச

வெட்கம் என்னும் மகுடம் சூடி

மௌனம் என்னும் காப்பு அணிந்து

தலைகவிழ்ந்து பின் நிலம் கீறி

அமர்கிறேன் குலம்போற்றும் தமிழ் பெண்ணாக !!



மனதில் இருப்பதை நான் கூற

நம்பிக்கைகொண்டு நான் தலை நிமிர

உன்னையும் மிஞ்சி நான் நடை போட

தவறு கண்டு நான் சினம் கொள்ள

என் காலிலே நான் நிற்க

சுதந்திர காற்றை நான் சுவாசிக்க

பிடிக்காததை நான் ஏற்க மறுக்க

மாறிடுவேன் நான் குலம்தூற்றும் திமிர்பிடித்தவளாக !!



இனியும் என்னருகில் கூச்சல் வேண்டாம்

அழகும் ஆபரணமும் பெரிது இல்லை

உன் சுதந்திரம் போகும் முன்னே

பறந்து செல் என் மாடப்புறாவே !

விநயன்



அடித்த போதும் அணைக்கிறாய்
எனக்கு வலித்தாலும் துடிக்கிறாய்
கர்த்தரின் புது கவிதை நீ !

கொடுத்தாலும் சிரிக்கிறாய்
எடுத்தாலும் சிரிக்கிறாய்
கீதையின் சிறு உருவம் நீ !

எதிலும் சந்தோசம் காண்கிறாய்
அனைவரிடமும் அதை பகிர்கிறாய்
புத்தரின் புத்துயிர் நீ !

குழந்தையும் தெய்வமும் வேறில்லை
இனியும் நான் நாத்திகனில்லை !
 
 
கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை உனக்கு
உன்னிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் !!



பே(போ)தை மனம்





இந்த நொடியின் ஆனந்தத்தை விட்டுவிட்டு

நேற்றைய வலியிலேயே இன்றும் உழல்கிறது

நாளைய ஆனந்தத்தை தேடி அலைகிறது

சந்தோசத்தின் தேடலிலியே நாட்களை கடத்துகிறது



எதிலுமே திருப்தி கொள்ள மறுக்கிறது

இல்லாத ஒன்றிற்காகவே ஏங்குகிறது

காலடியில் கிடக்கும் சொர்க்கம் தவிர்த்து

வான் நோக்கி பறந்து கொண்டிருக்கிறது



உடல் ஓய்ந்தாலும் ஓயாது துடிக்கிறது

உயிரின் கடைசி துளியை பருகியும்

தாகம் தணியாது தவிக்கிறது

தீரா பசிகொண்டு அலைகிறது

காதல் மொழி அறிவாயோ !!

நீ திட்டும் போதெல்லாம்

காது இருப்பதையே மறந்திருப்பேன்

கையிலடக்க நினைத்தபோதெல்லாம்

சிறகடிக்க நினைத்திருக்கிறேன்

ஒருவரில் ஒருவர் வேண்டினோம் மாற்றம்

இறுதியில் இருவருக்குமே ஏமாற்றம்

கை கோர்த்து சென்றிக்கிறோம்

முகம் சுளித்து திரும்பி இருக்கிறோம்

ஆணாதிக்க சண்முகம் நீ என்றேன்

வீண் வாதங்கள் வேண்டாம் என்றாய்

நீ ஏதுமறியாதவன் என நானிருந்தேன்

என்னைமட்டுமே அறிந்தவனாய் நீயிருந்தாய்

பிள்ளை மட்டுமே என்

 வாழ்வின் இனிமை என்றிருந்தேன்

உன்னுடைய தொலைவில் தான்

 வாழ்வின் வெறுமை உணர்ந்தேன்

பெற்றவர் செய்துவைத்த திருமணத்தில்

காதல் இருப்பதில்லை என்றிருந்தேன்

நீ இல்லாத தனிமையில் தான்

நாம் பேசிய காதல் மொழி

இதுவென்று உணர்ந்தேன் நான் !