படம் பார்த்து கவிதை சொல் !!

என் ஆபரணம் உனக்கு வேண்டுமோ

என் அழகு கண்டு மயக்கமோ

என்னைகண்டு கூச்சலிடும் பெண் புறாவே

எம் கதை கேள் அன்னமே !!



நீள் கூந்தல் பின்னி முடிந்து

மனம் கமழும் பூ சூடி

புது பட்டாடை சூழ்ந்து நிற்க

வலைகரங்களும் ஜிமிக்கியும் கதை பேச

வெட்கம் என்னும் மகுடம் சூடி

மௌனம் என்னும் காப்பு அணிந்து

தலைகவிழ்ந்து பின் நிலம் கீறி

அமர்கிறேன் குலம்போற்றும் தமிழ் பெண்ணாக !!



மனதில் இருப்பதை நான் கூற

நம்பிக்கைகொண்டு நான் தலை நிமிர

உன்னையும் மிஞ்சி நான் நடை போட

தவறு கண்டு நான் சினம் கொள்ள

என் காலிலே நான் நிற்க

சுதந்திர காற்றை நான் சுவாசிக்க

பிடிக்காததை நான் ஏற்க மறுக்க

மாறிடுவேன் நான் குலம்தூற்றும் திமிர்பிடித்தவளாக !!



இனியும் என்னருகில் கூச்சல் வேண்டாம்

அழகும் ஆபரணமும் பெரிது இல்லை

உன் சுதந்திரம் போகும் முன்னே

பறந்து செல் என் மாடப்புறாவே !