நான்காம் பிறந்தநாள் காணும் என் இனிய நட்பே !

நொடி பொழுதாய் கடந்துவந்த நான்கு வருடம்
திரும்பி பார்க்கிறேன் ,
எத்தனை இன்பங்கள் , துன்பங்கள்
ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள்
தனியாய் தவித்திருந்த தருணங்கள்
காதலாய் மாறிய நட்பு
நட்புக்குள்ளும் மறைத்த காதல்
சின்ன சின்ன சண்டைகள்
பெரிய பெரிய மொக்கைகள்
கூடி எடுத்துக்கொண்ட படங்கள்
தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள்
என்றும் மறக்காத காலச்சுவடுகள்


வாழ்க்கை ஒட்டத்தில் சற்று இளைப்பாற
ஓர் மரத்தில் கூடிய பறவைகள் நாம்
சிலர் உயரம் காண பறந்தோம்
சிலர் உயரம் இதுவே என இருந்தோம்
சிலர் விதியின் முடிவெதுவோ என பிரிந்தோம்
நிரந்திரம் இல்லை நிரந்திரம் என உணர்ந்தோம்

நம் கால்களின் வேர்கள் எங்கே முளைதிட்டாலும்
தங்கிஇருந்த மரத்தை மறவாமல் இருப்போம்!!

காயங்கள் மறந்து போகும்
ஞாபகங்கள் முந்திச்செல்லும்
பார்க்காமல் போனாலும்
பேசாமல் இருந்தாலும்
நட்பு மட்டுமே நீண்டு வாழும் !!

- இது என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் !!
இது என் நண்பர்களுக்கு அர்ப்பணம் !!

காதல் நடக்குது !!


தொலைவை எல்லாம் நொடியில்

தொலைத்து விட்டு

நீயும் நானும் நடக்க


பேசிய வார்த்தைகளை விட

நம்மிடம் இருந்த

மௌனம் கணக்க


பிரியும் நேரம் வருகையில்

இருவரின் கால்களும்

அன்ன நடை கற்பிக்க


சொல்லாத நம் காதல்

அடி நாக்கின்

கற்கண்டாய் இனிக்க

உனக்கும் கீழே இருப்பவர் கோடி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )

இரவு பத்து மணி இருக்கும் , சந்தியாவும் அவள் தாய் சரஸ்வதியும் இரண்டு கைகளிலும் பெட்டிகளை தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் . அந்த அவசர நடையிலும் சந்தியா விடாது அவள் தாயிடம் படபடத்துக்கொண்டிருந்தாள் .
" அன்னிக்குகூட அப்படிதான் என் ப்ரெண்டு ஊர்ல இருந்து வந்திருக்கா , அவள நாளைக்கு பார்க்க போறேன் னு சொன்னேன் அவ்ளோ தான் , நீ தான் முடிவெடுதுட்ட ல அப்புறம் எதுக்கு இந்தத்தகவல் மட்டும் சொல்லிக்கிட்டு ,புருஷன மதிக்கறது இல்ல னு சொல்ல ஆரம்பிச்சுட்டார் "
"...."
"இப்போ நம்ம வீட்டுக்கு வரணும்னா கூட ஆயிரத்தெட்டு தடவ அனுமதி கேட்கணும் , அம்மா அப்பாவ பார்க்க காரணம் தேட வேண்டியதா இருக்கு"
"...... "
" அப்பப்போ நான் கருப்பா இருக்கேன் னு கிண்டல் செஞ்சு சிரிப்பாங்க எல்லாரும், அத வேற சகிச்சுக்க வேண்டியிருக்கு "
"....."
" ஏன் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் னு இருக்கு "
" சும்மா போட்டு குழப்பிக்காத , எல்லாம் சரியாயிடும் , இரயில் வந்திருச்சு பாரு பெட்டி எடு " என்றாள் சரஸ்வதி .
அவளை விட ஒரு பெரிய புலம்பலோடு அந்த புகை வண்டி அவர்கள் அருகில் வந்து நின்றது . சந்தியா, அவளின் இருக்கையின் இடம் நோக்கி நகர்ந்தாள் . சந்தியாவின் இடத்தில ஒரு பாட்டி அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ,
" இது என் சீட் உங்க சீட் நம்பர் என்ன "
"அவங்களுக்கு நடு சீட் கொடுத்திருக்காங்க , அவங்களால அங்க ஏற முடியாது , நீங்க சீட் மாத்திக்கரிங்களா ? " என்றது ஒரு குரல் .
குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள் சந்தியா , சிறிது நேரம் இமைக்காமல் நின்றது அவள் விழி. ' பௌர்ணமி முகம் ' என்றெல்லாம் கவிஞர்கள் பாடுவது இந்த அழகை தானா. சிறிது நேரம் அவளை மறந்து இரசிக்கலானாள் .
மறுக்கவே தோன்றாமல் "சரி அவங்க படுத்துக்கட்டும் " என்று சொல்லி நடு சீட்டில் அவள் பெட்டிகளை வைத்து ஜன்னலோரம் நிற்கும் தாய்க்கு கை அசைத்தாள் .
" ஊருக்கு போய்ட்டு போன் பண்றேன் " என்று சொல்லி கை அசைக்க அந்த இரயில் வண்டியும் உடம்பசைத்து நகர ஆரம்பித்தது .
தன் சீட்டிற்கு வந்து படுத்தவளிடம் , புன்னகையோடு அந்தப்பெண்
" என் பேரு ஜனனி , தேங்க்ஸ் சீட் மாறி ஹெல்ப் பண்ணதுக்கு ,தனியா தான் ஊருக்கு போறீங்களா "
"உம்"
" உங்க கூட வந்தவங்க யாரு, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? "
" உம் . என் அம்மா அவங்க , சென்னை ல தான் என் வீடு"
" வேலைக்கு போறீங்களா "
"ஆமாம் , சாப்ட்வேர் என்ஜினீயரா இருக்கேன் "
" உங்க வீட்டுக்காரர் ? "
"அவரும் சாப்ட்வேர் என்ஜினீயர் தான் "
" அப்படினா சூபர் ல "
"என்னத்த சூப்பர் , பார்த்துக்க கூட நேரமில்லாத ஓட்டம் தான் , அப்டி அலைஞ்சு வேலை பண்ணாலுமே ஒன்னும் பெருசா நிக்கறது இல்ல "
வங்கியில் இருக்கும் 5 இலட்ச ருபாய் கடனை நினைக்கவே தலை சுற்றியது சந்தியாவுக்கு .
"என் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர் , மாடர்ன் டெக்னாலஜி கேள்விபட்டீர்கிங்களா அது எங்களோடது தான் . நல்ல பிரபலம் , நான் நுட்ரிசென் அண்ட் டயடிசியன் படிச்சேன் , ஆனா என்ன கட்டிக்கொடுத்த வீட்ல வேலைக்கு போக கூடாது னு சொல்லிட்டாங்க , வீட்ல சும்மாதான் இருக்கேன் இப்போ "
"வேலைக்கு போகலைனா என்ன , உங்க கலையை வீட்ல காமிக்கலாமே "
ஆறுதல் படுத்துவதாய் நினைத்து சொன்னால் சந்தியா .ஆனால் பெருமூச்சு விட்டால் ஜனனீ.
"எங்க வீட்ல யாரும் என்ன மதிக்கமாட்டாங்க , ஏன் என் பசங்களே நான் சொல்றத கேட்கமாட்டாங்க , பாருங்க என் பையன் எவ்ளோ குண்டயிருக்கான் ன்னு "
" மதிக்கறதும் இல்ல , என்ன தனியா எங்கயும் வெளிய விடறதும் இல்ல , பாருங்க இந்த பசங்கள லீவ் கு ஏற்காடு ல இருக்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வர இந்த பாட்டிய என் துணைக்கு அனுப்ச்சிருக்காங்க . பேருக்கு தான் நான் பெரிய வீட்டு மருமக , வெற்றிகரமான காதல் திருமணம் எல்லாம் அதோட விலை என் சுதந்திரம் னு அப்போ தெரியல "
அவளுக்கு துணையாக அனுப்பிய பாட்டிக்கு தான் துணை தேவைப்பட்டிருந்தது . இதற்கு சந்தியாவாள் எதுவும் சொல்ல முடியவில்லை ,
" ஏற்காடு எப்படி இருந்தது , நல்ல இருந்ததா " என்று மட்டும் கேட்டு வைத்தாள்
"ஹ்ம்ம் நல்லா இருந்திச்சு இந்த குழந்தைங்க தான் நல்ல ஆட்டம் போட்டுச்சு "
" என் வாழ்க்கை இப்டி ஆகும் னு நான் நினைக்கலை , என்ன தான் சுதந்திரம் சதவிகிதம் னு பேசினாலும் அடுப்படி தான் நமக்கு , நான் வீட்ட விட்டு கடைக்கு கூட தனியா போனதில்ல எல்லாத்துக்கும் ஒரு ஆள் துணைக்கு வருவாங்க "
"ஆனா நானும் வீட்ட விட்டு வெளிய எடத்துக்கு வரணும் னு ஆசை படறேன் ,எவ்ளோ நாள் தான் வீட்டுக்குள்ளயே இருக்கறது "
பதில் எதிர்பாராமல் பேசிக்கொண்டேயிருந்தாள் ஜனனீ .
"ஹ்ம்ம் , சரி தான் " என்று சொன்ன சந்தியாவிற்கு தன் சுதந்திரம் இப்பொழுது தான் புரிய வந்தது . தான் வேலைக்கு போவது , வெளிஇடங்களுக்கு சுதந்திரமாய் சுற்றுவது , விரும்பியதை வாங்குவது என்று தானே இருக்கிறாள் . தாய் வீடு மீது கணவன் காட்டும் வெறுப்பு மட்டும் தானே அவளை கலங்கவைத்துக் கொண்டிருந்தது . தன்னையும் அறியாமல் கண்மூடியவள் அப்பொழுதுதான் பல உண்மைகளை அறியலானாள்.
இரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் , ஜனனீ யை கூட்டிச்செல்ல அவன் கணவன் வந்திருந்தான் . எத்தனை புலம்பி இருந்தாலும் அவனை பார்த்ததும் மலராய் மலர்ந்தாள் , சிரித்துக்கொண்டே அவனோடு நடை இட்டாள் .

சந்தியா தனது வீட்டுக்குள் நுழைந்ததும் ,
" வண்டி லேட்டா " என்றாள் அத்தை
"ஆமாம் அத்த " சொன்னவள் விழி பாஸ்கரனை தேடியது . உணர்ந்தாள் போல் வந்த பாஸ்கரன் சந்தியாவை சலனமற்ற பார்வையில் பார்த்தான். மெல்லியதாய் புன்னகித்தாள் சந்தியா .
அன்று அலுவலகம் சென்ற சந்தியா , மெல்ல வேலைகளை கவனிக்கலானாள் .
"சந்தியா , டி சாப்பிடலாம் வா " என்று பூஜா அழைத்தாள்
" ஏன்தான் கல்யாணம் செஞ்சிகிட்டோம் னு இருக்கு டி " என்று ஆரம்பித்த பூஜாவை பார்த்து , புன்னகையோடு பாடலானாள் சந்தியா
" உனக்கும் கீழே இருப்பவர் கோடி ,நினைத்து பார்த்து நிம்மதி தேடு !"

அம்மா இங்கே ஓடி வா !!!

அன்புள்ள அம்மாவுக்கு ,

இன்றும் பள்ளிகுச்செல்லுகையில் அடம் பிடிக்கவில்லை

மதிய உணவை மீதமின்றி உண்டேன்

பள்ளி பாடத்தை முழுமையாக எழுதிக்கொண்டேன்

விளையாட்டுப்போட்டியில் நான் முதலாக வந்தேன்

பள்ளிச்சட்டையில் கரையேதும் செய்ய வில்லை

சமத்தாக வீட்டுப்பாடம் முடித்து விட்டேன்

இன்றும் நீர்த்திரையில் தான் கண்மூடினேன்

அழகான கனவில் அன்பான நீ

முத்தம் கொடுத்து நித்திரை கலைக்கிறாய்

உணவோடு பிசைந்து அன்பை ஊட்டுகிறாய்

பள்ளிக்கு நான் செல்ல கை அசைக்கிறாய்

இல்லம் வந்ததும் கதை கேட்கிறாய்

நோயென்று நான்படுக்க நீ துவண்டுபோகிறாய்

இடிக்கு நான் ஒடுங்க அனைத்துக்கொள்கிறாய்

உன் முகம் பார்க்க எத்தனிக்கையில்

கானல் நீராய் நீ பொய்யாகிறாய்

ஏக்கம் சுமந்து நான் நிற்கிறேன்

உன் ஸ்பரிசம் வேண்டி காத்திருக்கிறேன்

என்னை தொலைத்த விலாசம் மறந்தாயோ

கடலில் விழுந்த துளிஎன்னை மீட்டெடுப்பாயோ

நம்பிகைக்காலில் தான் நான் நடக்கின்றேன்

நீ என்னை அள்ளிஎடுக்க துடிக்கின்றேன்

பரிதாபங்கள் என்னை கொல்லும்முன் வந்துவிடு

இவ்வுலகில் எனக்கும்ஓர் முகவரி தந்துவிடு

தூங்காத விழியோடு

என்றும் அன்புடன்

அம்மு

மூன்றாம் வகுப்பு

அன்னை தெரேசா அனாதை இல்லம்

மனமென்னும் கூண்டில் நானும் ஓர் குற்றவாளி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

வீட்டின் முற்புறம் இருக்கும் வேப்பை மரம் பல நாட்கள் என் சிரிப்பிற்கு வித்திட்டிருக்கிறது .மனதில் புயல் மையம் கொள்ளும் போதெல்லாம் தென்றலென வருடும் தோழியாய் இருந்திருக்கிறது . ஆனால் இன்று மட்டும் ஏனோ கோபப்பார்வை அதன் மேல் .

பாபு , பார்த்தவுடனேயே மனதை கவரும் காந்தப்புன்னகைக்கு சொந்தக்காரன். என்னை பொறுத்தவரை அவனொரு பல்தொழில் வித்தகன் . தன் படிப்பையும் தொடர்ந்துக்கொண்டு தன் தந்தையின் தொழிலுக்கும் தோள் கொடுக்கும் திறமை படைத்தவன் .

வீடு வீடாக சென்று துணிகளை வாங்கி வருவது , இஸ்தரி செய்யப்பட்ட துணிகளை அந்தந்த வீட்டில் சேர்ப்பது என எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவன் . மீதமாகும் தின்பண்டங்களை ஊனமான மனதோடு அவனிடம் நீட்டுகையில் கள்ளமில்லா புன்னகையோடு பெற்றுச்செல்லும் அவன் முகம் பல நாட்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது .

குழந்தை பருவத்திற்கே உரிய குதூகலத்தோடு அன்று தான் அவனை பார்த்தேன் . அவன் மனதை ஒத்த வெண்மையான ஒரு பட்டத்தை எடுத்துக்கொண்டு வீதியை வலமிட்டுக்கொண்டிருந்தான் . ஏதோ ஒரு விமானத்தை இயக்குவது போல பூரிப்பு அவனிடம் , தனக்கு தோன்றிய உத்திகளையெல்லாம் காட்டினான் ,ஏனோ அவன் சிரிப்பு என்னுள்ளும் ஒரு குழந்தையை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.

மாலையில் மலர்கள தானே வாடிப்போகும் , பாபுவும் வாடிப்போய் நின்றிருந்தான் , தீவிரவாதியிடம் மாட்டித்தவிக்கும் பிணைக்கைதியின் கவலை தோய்ந்ததாய் அவன் முகம் . பதுங்கு குழியில் இருந்து பள்ளிக்குஎன்று செல்வோம் என ஏங்கும் ஈழத்துப்பிள்ளையின் ஏக்கம் சுமந்ததாய் அவன் முகம் . வீட்டின் வாசலின் முன் நின்று மேலே பார்த்திருந்தான் . அவனருகில் சென்றேன் நான் " என்னடா , இங்க நினுக்கிட்ட என்ன பண்ற? " என்றேன் "அக்கா, பட்டம் மரத்துல மாட்டிகிச்சு கா " என்றான் . பக்கத்து பட்டறையின் பக்கமாக வளைந்திருந்த வேப்பை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டிருந்தது அந்த பட்டம் , பட்டறையின் உள்பக்கமாக சென்றால் அதை எடுப்பது சுலபமாகும் என்று பட்டது, "ஏன்டா , அந்த பக்கம் போய் பட்டத்த எடுத்துத்தரச் சொல்லலாம்ல " என்றேன் ,"போனேன் கா அந்த செக்யூரிட்டி தாத்தா திட்றாரு , ரெண்டு ரூபாய்க்கு பொவயில வாங்கியாந்து கொடு அப்பதேன் எடுத்து கொடுப்பேங்க்றார் .அப்பா ட போய் கேட்டா திட்டுவாரு " சிறு பிள்ளையிடம் கூட லாபம் பார்க்கும் அந்த கிழவரா , இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிகொடு என்று தூண்டிய மனதை அடக்கிய புத்தியா , எதுவோ மனதை கலங்க செய்ய , எதோ ஒரு கோபம் மனதில் கொப்பளிக்க அந்த இடம் விட்டு அகன்றேன் நான் !

பாபு அதிக நேரம் அங்கேயே நின்று பார்த்துகொண்டிருந்தான் .நண்பன் கையை விட்டுப்பிரிந்த அந்த பட்டமும் அவனை சேர படபடத்துக்கொண்டிருந்தது . ஏனோ பிரிந்த நண்பர்களை நிலவும் , தென்றலும் நானும் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது .நின்று நின்று தளர்ந்து போன கால்களோடும் மனதோடும் அவன் வீடு திரும்பினான்.

காலையில் வீட்டைவிட்டு வெளியேறும் போது என்றும் போல் என்னை வருடியது வேப்பை மரக்காற்று . ஊமையான கதறலை வெளியிட்டுகொண்டிருந்தது அந்தப்பட்டம் . "உன்னிடம் ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கிரதே அப்பொழுதும் கூட உன்னால் எப்படி தென்றலை வீச முடிகிறது ? புயலென வீசி உன் கையில் துடிக்கும் பட்டதை தரை இறக்க மாட்டாயா ? இங்கே மனிதர்களெல்லாம் மரமாகி போக, மரமே நீ என்ன மனிதனாகிப்போனாயோ ? என்ன நடந்தாலும் எனகென்ன என்றிருக்கிராயே ! " ஊமையாய் கேள்விகேட்க இரண்டு நொடி மட்டுமே என்னால் ஒதுக்க முடிந்தது . அடுத்த நொடியில் , விதியின் கையில் பட்டமாய் நானும் பறந்தேன் இன்னும் எத்தனை நாட்கள் உயரம் நிரந்தரம் என்பதை அறியாமல் !