மனமென்னும் கூண்டில் நானும் ஓர் குற்றவாளி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

வீட்டின் முற்புறம் இருக்கும் வேப்பை மரம் பல நாட்கள் என் சிரிப்பிற்கு வித்திட்டிருக்கிறது .மனதில் புயல் மையம் கொள்ளும் போதெல்லாம் தென்றலென வருடும் தோழியாய் இருந்திருக்கிறது . ஆனால் இன்று மட்டும் ஏனோ கோபப்பார்வை அதன் மேல் .

பாபு , பார்த்தவுடனேயே மனதை கவரும் காந்தப்புன்னகைக்கு சொந்தக்காரன். என்னை பொறுத்தவரை அவனொரு பல்தொழில் வித்தகன் . தன் படிப்பையும் தொடர்ந்துக்கொண்டு தன் தந்தையின் தொழிலுக்கும் தோள் கொடுக்கும் திறமை படைத்தவன் .

வீடு வீடாக சென்று துணிகளை வாங்கி வருவது , இஸ்தரி செய்யப்பட்ட துணிகளை அந்தந்த வீட்டில் சேர்ப்பது என எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவன் . மீதமாகும் தின்பண்டங்களை ஊனமான மனதோடு அவனிடம் நீட்டுகையில் கள்ளமில்லா புன்னகையோடு பெற்றுச்செல்லும் அவன் முகம் பல நாட்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது .

குழந்தை பருவத்திற்கே உரிய குதூகலத்தோடு அன்று தான் அவனை பார்த்தேன் . அவன் மனதை ஒத்த வெண்மையான ஒரு பட்டத்தை எடுத்துக்கொண்டு வீதியை வலமிட்டுக்கொண்டிருந்தான் . ஏதோ ஒரு விமானத்தை இயக்குவது போல பூரிப்பு அவனிடம் , தனக்கு தோன்றிய உத்திகளையெல்லாம் காட்டினான் ,ஏனோ அவன் சிரிப்பு என்னுள்ளும் ஒரு குழந்தையை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.

மாலையில் மலர்கள தானே வாடிப்போகும் , பாபுவும் வாடிப்போய் நின்றிருந்தான் , தீவிரவாதியிடம் மாட்டித்தவிக்கும் பிணைக்கைதியின் கவலை தோய்ந்ததாய் அவன் முகம் . பதுங்கு குழியில் இருந்து பள்ளிக்குஎன்று செல்வோம் என ஏங்கும் ஈழத்துப்பிள்ளையின் ஏக்கம் சுமந்ததாய் அவன் முகம் . வீட்டின் வாசலின் முன் நின்று மேலே பார்த்திருந்தான் . அவனருகில் சென்றேன் நான் " என்னடா , இங்க நினுக்கிட்ட என்ன பண்ற? " என்றேன் "அக்கா, பட்டம் மரத்துல மாட்டிகிச்சு கா " என்றான் . பக்கத்து பட்டறையின் பக்கமாக வளைந்திருந்த வேப்பை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டிருந்தது அந்த பட்டம் , பட்டறையின் உள்பக்கமாக சென்றால் அதை எடுப்பது சுலபமாகும் என்று பட்டது, "ஏன்டா , அந்த பக்கம் போய் பட்டத்த எடுத்துத்தரச் சொல்லலாம்ல " என்றேன் ,"போனேன் கா அந்த செக்யூரிட்டி தாத்தா திட்றாரு , ரெண்டு ரூபாய்க்கு பொவயில வாங்கியாந்து கொடு அப்பதேன் எடுத்து கொடுப்பேங்க்றார் .அப்பா ட போய் கேட்டா திட்டுவாரு " சிறு பிள்ளையிடம் கூட லாபம் பார்க்கும் அந்த கிழவரா , இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிகொடு என்று தூண்டிய மனதை அடக்கிய புத்தியா , எதுவோ மனதை கலங்க செய்ய , எதோ ஒரு கோபம் மனதில் கொப்பளிக்க அந்த இடம் விட்டு அகன்றேன் நான் !

பாபு அதிக நேரம் அங்கேயே நின்று பார்த்துகொண்டிருந்தான் .நண்பன் கையை விட்டுப்பிரிந்த அந்த பட்டமும் அவனை சேர படபடத்துக்கொண்டிருந்தது . ஏனோ பிரிந்த நண்பர்களை நிலவும் , தென்றலும் நானும் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது .நின்று நின்று தளர்ந்து போன கால்களோடும் மனதோடும் அவன் வீடு திரும்பினான்.

காலையில் வீட்டைவிட்டு வெளியேறும் போது என்றும் போல் என்னை வருடியது வேப்பை மரக்காற்று . ஊமையான கதறலை வெளியிட்டுகொண்டிருந்தது அந்தப்பட்டம் . "உன்னிடம் ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கிரதே அப்பொழுதும் கூட உன்னால் எப்படி தென்றலை வீச முடிகிறது ? புயலென வீசி உன் கையில் துடிக்கும் பட்டதை தரை இறக்க மாட்டாயா ? இங்கே மனிதர்களெல்லாம் மரமாகி போக, மரமே நீ என்ன மனிதனாகிப்போனாயோ ? என்ன நடந்தாலும் எனகென்ன என்றிருக்கிராயே ! " ஊமையாய் கேள்விகேட்க இரண்டு நொடி மட்டுமே என்னால் ஒதுக்க முடிந்தது . அடுத்த நொடியில் , விதியின் கையில் பட்டமாய் நானும் பறந்தேன் இன்னும் எத்தனை நாட்கள் உயரம் நிரந்தரம் என்பதை அறியாமல் !

4 comments:

மொழி said...

உங்கள் எழுத்து நன்றாக இருந்தது...
வாழ்த்துக்கள்...

Unknown said...

கதைப் படித்தேன்.வளரும் எழுத்தாளர் என்று தெரிகிறது.இந்த சின்னக் கருவை வைத்துக்கொண்டு மிகை இல்லாமல் எழுதலாம்.

எது மிகை?

//. "உன்னிடம் ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கிரதே அப்பொழுதும் கூட உன்னால் எப்படி தென்றலை வீச முடிகிறது ? புயலென வீசி உன் கையில் துடிக்கும் பட்டதை தரை இறக்க மாட்டாயா ? இங்கே மனிதர்களெல்லாம் மரமாகி போக, மரமே நீ என்ன மனிதனாகிப்போனாயோ ? என்ன நடந்தாலும் எனகென்ன என்றிருக்கிராயே ! " //

தயவு செய்து யதார்த்தமாக எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

நிலாரசிகன் said...

எழுத்துப்பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள்.

வாசிப்பவருக்கு தடங்கலாக அமைந்துவிடும்.

"ஓர் குற்றவாளி" என்பது தவறு. ஒரு குற்றவாளி என்பதே சரி.

வெற்றி பெற வாழ்த்துகள்.

தேன்மொழி said...

மொழி ,
நன்றி

ரவி ஷங்கர்
உங்கள் கருத்தை கண்டிப்பாக கவனத்தில் கொள்கிறேன்

நிலாரசிகன்,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி . அடுத்த முறை கண்டிப்பாக எழுத்துப்பிழைகளை தவிர்க்கிறேன் !!