ஆடைகளில் பின்னிய நினைவுகள்

 



 பழைய ஆடைகளோடு 

பழைய நினைவுகளையும்

உடுத்திப் பார்க்கிறேன்

என்னில் நான்

 

சில கறைகள்

சிரிப்பை தருகிறது

சில கறைகள்

மறைய மறுக்கிறது

 

சிலது பொருந்தும்

இன்னும் கச்சிதமாய்

சிலது பொருந்தாமல்

விலகியே நிற்கும்

 

வெண்மை மறந்த

கதைசொல்லி ஜிப்பா

வெள்ளாவி போட்டு

சரிசெய்ய வேண்டும்

  

கொடிக்கம்பி கிழித்த

நீல ரவிக்கையில்

பட்டாம்பூச்சி   பூத்தையல்

போட்டு மறைக்கவேண்டும்

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டாலும்

மரப்பெட்டியின்  ஓரத்தில்

முதுமையிலும் என்னோடு

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டால்

மனமுவந்து மாலாக்காவின்

மகளுக்கு தந்திடவேண்டும்

 

ஆடைகளோடு நினைவுகளையும்

ஒழுங்குசெய்து வைக்கலாகுமோ !!