மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .சாலையில் கணவன் கையை கோர்த்துக்கொண்டு நடப்பதையே விரும்பாதவள் , அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் , அவள் கணவன் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . இத்தனை நெருக்கமும் அன்யோன்யமும் அவர்களுக்குள் வந்தது எப்படி ?
திருமணத்தின் மீது பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை அமுதாவிற்கு , அவளதுவேலையில் இருக்கும் சுவாரசியமும் ,ஈர்ப்பும் ஏனோ அவள் திருமண வாழ்கையில் இருப்பதாக உணர்ந்ததே இல்லை . கடமையாக மட்டுமே நினைத்த அவள் இல்வாழ்க்கையில் காதலுக்கு இடமே இருந்தது இல்லை . அவள் வளர்ந்த சூழலிற்கு முற்றிலும் மாறுபட்ட அவள் புகுந்த வீடு , அங்கு கிடைக்காத சிந்தனை சுதந்திரம் , பிடிக்காதவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் , எல்லா விஷயங்களிலும் பாஸ்கரனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு , ஆசைகளுக்கெல்லாம் ஏற்பட்ட தடை எல்லாமும் அவள் திருமண வாழ்க்கையில்கசப்பை கூட்டிக்கொண்டே போயின.என்றும் அவள் எண்ணத்தில் இழந்து விட்ட அவள் சுதந்திரத்தின் சோக கீதம் தான் .. இப்படித்தான் மெதுவாய் கடந்தது ஒன்றரை வருடம் .
பாலைவனமான அவள் மனதில் பூத்தது ஒரு சந்தோசப்பூ . அவள் கர்ப்பமானதைஉறுதிப்படுத்திய அந்த நொடி , அவள் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தது . பல கோடி மத்தாப்புகள் ஒன்றாய் சிரிப்பது போல் அவள் மகிழ்ந்தாள் . தனக்காகவென்றே ஒரு ஜீவன் அந்த வீட்டுக்குள் வரப்போவதை நினைதுநினைத்து பூரித்து போனாள் .அவள் வீட்டின் வானிலையே மாறிவிட்டது . அவளுக்காகவே அவள் குடும்பம் சுழன்றது . எந்நேரமும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றும் பாஸ்கரன் , அவளுக்காக பரிந்து பேசினான். பழங்களை வாங்கி குவித்தான் . அவன் கண்களிலும் அவள் கனவுகளை கண்டான் . ஒன்றாய் பல திட்டங்களை தீட்டினார்கள் . வேறுபாடில்லாத கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் .இல்லற வாழ்வின் சாராம்சத்தை உணர்ந்தாள் . அலுவலகத்தை விட வீடு அவளை ஈர்க்கத்தொடங்கியது . வீட்டிலேயே அதிக நேரம் களித்து மகிழ்ந்தாள் . அவள் இல்லறத்திலும் இத்தனை இன்பங்களா என்று சிலிர்த்தாள் . ஆனால் நிலைக்கவில்லை அவள் நினைப்பு .
சில நாட்களாய் தனக்கு ஏற்படும் உபாதையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றாள். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர் சொன்ன பதில் அவளுக்குள் இடியாக இறங்கியது . கருவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவும் , கருவிற்கு இதயம்உருவாகவே இல்லை என்றும் , இதய துடிப்பில்லாத அந்த கருவை கலைத்து விடுவது தான் அமுதாவிற்கு நல்லது என்று சொன்னார். கருவை கலைப்பது தான்அவளுக்கு நல்லதா ? அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா ?? ஆயிரம் கேள்விகள் மின்னலாய் பாய்ந்தது .
மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .பல ஆயிரங்கலாய் உடைந்து போனாள் அமுதா . அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . பாஸ்கரன் செய்வதறியாது தவித்தான். வேறு சில மருத்துவர்களிடம் அவளை அழைத்துசென்றான் . சொல்லிவைத்தார் போல் எல்லா மருத்துவர்களும் அதையேசொல்ல, முடிவை எண்ணி முடிவில்லா சோகத்தில் மூழ்கினாள் அமுதா . வானில் பறந்திருந்தவள் அகள பாதாளத்தில் ஒடுங்கியது போல் உணர்ந்தாள் .
அமுதாவின் தாய் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலே கடிந்து கொள்ளும் பாஸ்கரன், அமுதாவின் மனநிலை உணர்ந்து அவளை அங்கு அழைத்துச்சென்றான் . கருகலைப்பு நடந்து இரண்டு நாட்களுக்கு அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் . யாரும் அவள் மனதை காய படுத்திவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான் . சொந்தங்களின் துக்க விசாரிப்புகள் அவளை நெருங்காது பார்த்துக்கொண்டான் .
இத்தனை இனியவனா அவள் கணவன் என்றெண்ணிய அமுதா சோக கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் ஒன்றாக வார்த்தாள். அதிகநேரம் அவன் மடியிலேயே சாய்ந்து கிடந்தாள் . மற்றவர்களின் வாய் ஆறுதல்களை விட , அது அவளை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பியது . கணவனின் ஸ்பரிசத்தை அன்று தான் மனதளவில் உணர்ந்தாள் அவள் ....
இவர்களின் இதயங்களை இணைத்துவிட்டு , உறவுக்கு உயிர் கொடுத்துச்சென்ற அந்த கருவிற்கு இதயம் இல்லை என்று சொல்கிறது மருத்துவம் !
Subscribe to:
Posts (Atom)