ஆடைகளில் பின்னிய நினைவுகள்

 



 பழைய ஆடைகளோடு 

பழைய நினைவுகளையும்

உடுத்திப் பார்க்கிறேன்

என்னில் நான்

 

சில கறைகள்

சிரிப்பை தருகிறது

சில கறைகள்

மறைய மறுக்கிறது

 

சிலது பொருந்தும்

இன்னும் கச்சிதமாய்

சிலது பொருந்தாமல்

விலகியே நிற்கும்

 

வெண்மை மறந்த

கதைசொல்லி ஜிப்பா

வெள்ளாவி போட்டு

சரிசெய்ய வேண்டும்

  

கொடிக்கம்பி கிழித்த

நீல ரவிக்கையில்

பட்டாம்பூச்சி   பூத்தையல்

போட்டு மறைக்கவேண்டும்

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டாலும்

மரப்பெட்டியின்  ஓரத்தில்

முதுமையிலும் என்னோடு

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டால்

மனமுவந்து மாலாக்காவின்

மகளுக்கு தந்திடவேண்டும்

 

ஆடைகளோடு நினைவுகளையும்

ஒழுங்குசெய்து வைக்கலாகுமோ !!

 

என்னை ஏமாற்றிவிட்டாய் 
என்றுதானே நினைத்திருந்தேன் 
என்னை ஏன் மாற்றிவிட்டாய் !!


உன் மெல்லிசை கேட்கையில்
குத்தாட்டம் போடுமென் மனது!!





உன் முகம் அறிந்தும் அறியாமல்
உன் அகம் புரிந்தும் புரியாமல்
 என் நிலை தெரிந்தும் தெரியாமல்
தன்னிலை மறந்தும் மறவாமல்
காந்தம் ஈர்த்த இரும்பாய்
கள்ளில் விழுந்த வண்டாய்
உன் குரல் கேட்ட பொழுதில்
என் மனம் வீழ்ந்திட்ட நொடியில்
மூழ்குபவனின் மூச்சுக்காற்றாய்
உறைந்தவன் ஏங்கிய அனலாய்
 கிடைத்திட்டாய் நீ எனக்கு!!

குழந்தை கையில் பொம்மை நீ
எடுத்தெரிந்தாலும் நீ வேண்டும்
 அது அணைத்துரங்கிட

விடியாதொரு இரவினில்
காணாதொரு கனவினில்
உன் குரல் ஒலி வழியில்
மதி மயங்கி செல்கின்றேன்
தோழன் தோள் சாயந்து துயில் கொள்ள
மீளாதொரு உறக்கம்....
மு(அ)கம் தெரியாதவனின் தந்தி தகவல்கள்
முழுக்க முழுக்க பொய்கள்
சிலிர்க்க வைத்த சில்மிஷங்கள்
புழுகு மூட்டை ஏனோ கணக்கவில்லை
இதயமற்ற இடத்தில் இதமாய்!!

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே !


கண்ணோடு கண்ணினை நோக்கிடு

நிமிர்ந்த நன்னடை கொண்டிடு

நீ நினைத்ததை முடித்திடு

அன்பு கொண்டு வென்றிடு

புன்னகை என்றும் சிந்திடு

புவியெங்கும் தடத்தினை பதித்திடு

புதுமையான பழமை நீ

புத்துணர்ச்சி வாசம் நீ

வெற்றிகாணும் வியுகம் நீ

வானளக்கும் விண்கலம் நீ



உன்னை நீ அறிந்திடு போதும்

தேவைபடாது 35 சதவிகிதம்

படம் பார்த்து கவிதை சொல் !!

என் ஆபரணம் உனக்கு வேண்டுமோ

என் அழகு கண்டு மயக்கமோ

என்னைகண்டு கூச்சலிடும் பெண் புறாவே

எம் கதை கேள் அன்னமே !!



நீள் கூந்தல் பின்னி முடிந்து

மனம் கமழும் பூ சூடி

புது பட்டாடை சூழ்ந்து நிற்க

வலைகரங்களும் ஜிமிக்கியும் கதை பேச

வெட்கம் என்னும் மகுடம் சூடி

மௌனம் என்னும் காப்பு அணிந்து

தலைகவிழ்ந்து பின் நிலம் கீறி

அமர்கிறேன் குலம்போற்றும் தமிழ் பெண்ணாக !!



மனதில் இருப்பதை நான் கூற

நம்பிக்கைகொண்டு நான் தலை நிமிர

உன்னையும் மிஞ்சி நான் நடை போட

தவறு கண்டு நான் சினம் கொள்ள

என் காலிலே நான் நிற்க

சுதந்திர காற்றை நான் சுவாசிக்க

பிடிக்காததை நான் ஏற்க மறுக்க

மாறிடுவேன் நான் குலம்தூற்றும் திமிர்பிடித்தவளாக !!



இனியும் என்னருகில் கூச்சல் வேண்டாம்

அழகும் ஆபரணமும் பெரிது இல்லை

உன் சுதந்திரம் போகும் முன்னே

பறந்து செல் என் மாடப்புறாவே !

விநயன்



அடித்த போதும் அணைக்கிறாய்
எனக்கு வலித்தாலும் துடிக்கிறாய்
கர்த்தரின் புது கவிதை நீ !

கொடுத்தாலும் சிரிக்கிறாய்
எடுத்தாலும் சிரிக்கிறாய்
கீதையின் சிறு உருவம் நீ !

எதிலும் சந்தோசம் காண்கிறாய்
அனைவரிடமும் அதை பகிர்கிறாய்
புத்தரின் புத்துயிர் நீ !

குழந்தையும் தெய்வமும் வேறில்லை
இனியும் நான் நாத்திகனில்லை !
 
 
கற்றுக்கொடுக்க ஒன்றுமில்லை உனக்கு
உன்னிடம் கற்றுக்கொள்ள ஆயிரமாயிரம் !!



பே(போ)தை மனம்





இந்த நொடியின் ஆனந்தத்தை விட்டுவிட்டு

நேற்றைய வலியிலேயே இன்றும் உழல்கிறது

நாளைய ஆனந்தத்தை தேடி அலைகிறது

சந்தோசத்தின் தேடலிலியே நாட்களை கடத்துகிறது



எதிலுமே திருப்தி கொள்ள மறுக்கிறது

இல்லாத ஒன்றிற்காகவே ஏங்குகிறது

காலடியில் கிடக்கும் சொர்க்கம் தவிர்த்து

வான் நோக்கி பறந்து கொண்டிருக்கிறது



உடல் ஓய்ந்தாலும் ஓயாது துடிக்கிறது

உயிரின் கடைசி துளியை பருகியும்

தாகம் தணியாது தவிக்கிறது

தீரா பசிகொண்டு அலைகிறது

காதல் மொழி அறிவாயோ !!

நீ திட்டும் போதெல்லாம்

காது இருப்பதையே மறந்திருப்பேன்

கையிலடக்க நினைத்தபோதெல்லாம்

சிறகடிக்க நினைத்திருக்கிறேன்

ஒருவரில் ஒருவர் வேண்டினோம் மாற்றம்

இறுதியில் இருவருக்குமே ஏமாற்றம்

கை கோர்த்து சென்றிக்கிறோம்

முகம் சுளித்து திரும்பி இருக்கிறோம்

ஆணாதிக்க சண்முகம் நீ என்றேன்

வீண் வாதங்கள் வேண்டாம் என்றாய்

நீ ஏதுமறியாதவன் என நானிருந்தேன்

என்னைமட்டுமே அறிந்தவனாய் நீயிருந்தாய்

பிள்ளை மட்டுமே என்

 வாழ்வின் இனிமை என்றிருந்தேன்

உன்னுடைய தொலைவில் தான்

 வாழ்வின் வெறுமை உணர்ந்தேன்

பெற்றவர் செய்துவைத்த திருமணத்தில்

காதல் இருப்பதில்லை என்றிருந்தேன்

நீ இல்லாத தனிமையில் தான்

நாம் பேசிய காதல் மொழி

இதுவென்று உணர்ந்தேன் நான் !









கண்ணே வேண்டும் ஒரு எட்டாம் அறிவு !!

உன்னில் தடவியதும் பெற்ற நல்லெண்ணையின் புது வாடை    
உன்னில் பரவியதும் புத்துணர்ச்சி   பெற்றிட்ட புத்தாடை 
 
பூவாணம் தூவுகையில் மலர்ந்திட்ட உன்முகம்
ஒளிர்மலர் கரங்கள் கண்டு தட்டிய   உன் கரம்
 
மத்தாப்பு இதழ்   உதிர்கையில்  மலர்ந்திட்ட உன் முகம்
சரவெடி சப்த்தத்தில் என் மார்போடு தழுவிய உன் ஸ்பரிசம்        
 
பம்பரமாய் சுற்றிய சங்குசக்கரம்
கையில் அள்ளிட துடித்திட்ட உன் துணிகரம்
 
 மாசு மண்டலம் நிறைந்து மூச்சுமுட்டிய நேரத்திலும்      
புகைமண்டலம் நடுவே நீ தந்திட்ட சொர்க்கம்
 
கண்ணே உன்னோடு பல தீபாவளி பார்த்திட ஆசை தான்
அதுவரை   பூமி பந்து தாங்கி நிற்குமா இந்த கொடுமையை
 
என்று உணர்வோம் தனக்கே    குளிபரித்துகொள்ளும்   இந்த மடமையை
என்று உணர்வோம்   பூமி தாய்க்கு     செய்ய வேண்டிய  நம் கடமையை
 
செய்ய வேண்டும் மனதின் நிசப்தம் வெல்லும் ஒரு சரவெடியை
செய்ய வேண்டும் உள்ளத்தின் இருள் போக்கும் ஒரு மத்தாப்பை
 
செய்ய வேண்டும் அன்பென பொழியும் ஒரு பூவானத்தை 
செய்ய வேண்டும் மடமைகளை அறுத்தெறியும் ஒரு சங்கு சக்கரத்தை 
 
கண்ணே  உடனே செய்ய வேண்டும் இந்த  ஆயுதத்தை 
தேவை படும் உணர்ந்துகொள் உன் எட்டாம் அறிவை!!

லாலி லாலி

லாலி லாலி செல்லமே லாலி
லாலி லாலி என் கண்ணே லாலி

தூரியில் போட்டு ஆட்டுவேன் லாலி
ஆட்டி நானும் பாடுவேன் லாலி
நான் பாட நீயும் தூங்கிடு லாலி
தூங்கிட மெல்ல கண் மூடு லாலி

உன் தாய் நானும் உன்னுடன் இருப்பேன்
உனையேதும் தீண்டாது காவல் நான் காப்பேன்
கண்ணே நானிருக்க கலக்கம்தான் ஏனோ
அமுதே நானிருக்க அமைதியாய் தூங்கு

பூமிக்கு வந்த சூரியன் நீயோ
என்மடி பூத்த தாமரை தானோ
பிஞ்சு நிலவோ நீ கொஞ்சு புறாவோ
செல்ல கிளியோ இல்லை சங்க தமிழோ

ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா !

எனக்குள் வந்த மாற்றமே
அழகான இடை ஏற்றமே
என்னை நானே ரசிக்கின்றேன்
என்னுள் நீ வசிப்பதினால்

என்னில் கனவுகள் தருகிறாய்
இயற்கையான அதிசயமாய் விரிகிறாய்
ரணங்களெல்லாம் மறந்து போக
பூரண நிவாரணியாய் வருகிறாய்

பார்க்காமலே காதல் புரிதலில்
காதல் உணர்தலில் காதல்
எல்லா வகையிலும் உன்னை
காதலிக்க வைத்தாய் நீ

தண்ணீர் குடத்தில் ஜனிக்கும்
முத்தே என் முழுமதியே
கண்ணீர் துடைக்க வந்த
கண்ணே என் களஞ்சியமே

என் வாழ்வின் வசந்தமே
என்னை வருடிச்செல்லும் தென்றலே
உன் அசைவிலே அசரவைக்கிறாய்
உதைத்தே உற்சாகம் ஊட்டுகிறாய்

நான்கு கண்கள் காணும்
ஒற்றை கனவு நீ
இரண்டு உயிர்கள் சுமக்கும்
ஒற்றை ஜீவன் நீ

உன்னை ஏந்தும் நொடிக்காக
கையேந்தி காத்திருக்கிறேன் நான்
உனக்கு புகட்ட வேண்டியே
அன்பு சுரந்து வீற்றிருக்கிறேன்

நினைத்ததை முடிக்கும் விநயனா
நினைத்ததும் சிலிர்க்கும் தென்றலா
புதிரின் முடிச்சு அவிலட்டும்
புன்னகை பூ மலரட்டும்

நான்காம் பிறந்தநாள் காணும் என் இனிய நட்பே !

நொடி பொழுதாய் கடந்துவந்த நான்கு வருடம்
திரும்பி பார்க்கிறேன் ,
எத்தனை இன்பங்கள் , துன்பங்கள்
ஒன்றாய் கூடி அடித்த கும்மாளங்கள்
தனியாய் தவித்திருந்த தருணங்கள்
காதலாய் மாறிய நட்பு
நட்புக்குள்ளும் மறைத்த காதல்
சின்ன சின்ன சண்டைகள்
பெரிய பெரிய மொக்கைகள்
கூடி எடுத்துக்கொண்ட படங்கள்
தனியாய் கற்றுக்கொண்ட பாடங்கள்
என்றும் மறக்காத காலச்சுவடுகள்


வாழ்க்கை ஒட்டத்தில் சற்று இளைப்பாற
ஓர் மரத்தில் கூடிய பறவைகள் நாம்
சிலர் உயரம் காண பறந்தோம்
சிலர் உயரம் இதுவே என இருந்தோம்
சிலர் விதியின் முடிவெதுவோ என பிரிந்தோம்
நிரந்திரம் இல்லை நிரந்திரம் என உணர்ந்தோம்

நம் கால்களின் வேர்கள் எங்கே முளைதிட்டாலும்
தங்கிஇருந்த மரத்தை மறவாமல் இருப்போம்!!

காயங்கள் மறந்து போகும்
ஞாபகங்கள் முந்திச்செல்லும்
பார்க்காமல் போனாலும்
பேசாமல் இருந்தாலும்
நட்பு மட்டுமே நீண்டு வாழும் !!

- இது என் வாழ்க்கையில வந்த வசந்த காலம் !!
இது என் நண்பர்களுக்கு அர்ப்பணம் !!

காதல் நடக்குது !!


தொலைவை எல்லாம் நொடியில்

தொலைத்து விட்டு

நீயும் நானும் நடக்க


பேசிய வார்த்தைகளை விட

நம்மிடம் இருந்த

மௌனம் கணக்க


பிரியும் நேரம் வருகையில்

இருவரின் கால்களும்

அன்ன நடை கற்பிக்க


சொல்லாத நம் காதல்

அடி நாக்கின்

கற்கண்டாய் இனிக்க

உனக்கும் கீழே இருப்பவர் கோடி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது )

இரவு பத்து மணி இருக்கும் , சந்தியாவும் அவள் தாய் சரஸ்வதியும் இரண்டு கைகளிலும் பெட்டிகளை தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க அந்த இரயில்வே நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள் . அந்த அவசர நடையிலும் சந்தியா விடாது அவள் தாயிடம் படபடத்துக்கொண்டிருந்தாள் .
" அன்னிக்குகூட அப்படிதான் என் ப்ரெண்டு ஊர்ல இருந்து வந்திருக்கா , அவள நாளைக்கு பார்க்க போறேன் னு சொன்னேன் அவ்ளோ தான் , நீ தான் முடிவெடுதுட்ட ல அப்புறம் எதுக்கு இந்தத்தகவல் மட்டும் சொல்லிக்கிட்டு ,புருஷன மதிக்கறது இல்ல னு சொல்ல ஆரம்பிச்சுட்டார் "
"...."
"இப்போ நம்ம வீட்டுக்கு வரணும்னா கூட ஆயிரத்தெட்டு தடவ அனுமதி கேட்கணும் , அம்மா அப்பாவ பார்க்க காரணம் தேட வேண்டியதா இருக்கு"
"...... "
" அப்பப்போ நான் கருப்பா இருக்கேன் னு கிண்டல் செஞ்சு சிரிப்பாங்க எல்லாரும், அத வேற சகிச்சுக்க வேண்டியிருக்கு "
"....."
" ஏன் தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் னு இருக்கு "
" சும்மா போட்டு குழப்பிக்காத , எல்லாம் சரியாயிடும் , இரயில் வந்திருச்சு பாரு பெட்டி எடு " என்றாள் சரஸ்வதி .
அவளை விட ஒரு பெரிய புலம்பலோடு அந்த புகை வண்டி அவர்கள் அருகில் வந்து நின்றது . சந்தியா, அவளின் இருக்கையின் இடம் நோக்கி நகர்ந்தாள் . சந்தியாவின் இடத்தில ஒரு பாட்டி அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு ,
" இது என் சீட் உங்க சீட் நம்பர் என்ன "
"அவங்களுக்கு நடு சீட் கொடுத்திருக்காங்க , அவங்களால அங்க ஏற முடியாது , நீங்க சீட் மாத்திக்கரிங்களா ? " என்றது ஒரு குரல் .
குரல் வந்த திசை நோக்கி திரும்பினாள் சந்தியா , சிறிது நேரம் இமைக்காமல் நின்றது அவள் விழி. ' பௌர்ணமி முகம் ' என்றெல்லாம் கவிஞர்கள் பாடுவது இந்த அழகை தானா. சிறிது நேரம் அவளை மறந்து இரசிக்கலானாள் .
மறுக்கவே தோன்றாமல் "சரி அவங்க படுத்துக்கட்டும் " என்று சொல்லி நடு சீட்டில் அவள் பெட்டிகளை வைத்து ஜன்னலோரம் நிற்கும் தாய்க்கு கை அசைத்தாள் .
" ஊருக்கு போய்ட்டு போன் பண்றேன் " என்று சொல்லி கை அசைக்க அந்த இரயில் வண்டியும் உடம்பசைத்து நகர ஆரம்பித்தது .
தன் சீட்டிற்கு வந்து படுத்தவளிடம் , புன்னகையோடு அந்தப்பெண்
" என் பேரு ஜனனி , தேங்க்ஸ் சீட் மாறி ஹெல்ப் பண்ணதுக்கு ,தனியா தான் ஊருக்கு போறீங்களா "
"உம்"
" உங்க கூட வந்தவங்க யாரு, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? "
" உம் . என் அம்மா அவங்க , சென்னை ல தான் என் வீடு"
" வேலைக்கு போறீங்களா "
"ஆமாம் , சாப்ட்வேர் என்ஜினீயரா இருக்கேன் "
" உங்க வீட்டுக்காரர் ? "
"அவரும் சாப்ட்வேர் என்ஜினீயர் தான் "
" அப்படினா சூபர் ல "
"என்னத்த சூப்பர் , பார்த்துக்க கூட நேரமில்லாத ஓட்டம் தான் , அப்டி அலைஞ்சு வேலை பண்ணாலுமே ஒன்னும் பெருசா நிக்கறது இல்ல "
வங்கியில் இருக்கும் 5 இலட்ச ருபாய் கடனை நினைக்கவே தலை சுற்றியது சந்தியாவுக்கு .
"என் வீட்டுக்காரர் பெரிய தொழிலதிபர் , மாடர்ன் டெக்னாலஜி கேள்விபட்டீர்கிங்களா அது எங்களோடது தான் . நல்ல பிரபலம் , நான் நுட்ரிசென் அண்ட் டயடிசியன் படிச்சேன் , ஆனா என்ன கட்டிக்கொடுத்த வீட்ல வேலைக்கு போக கூடாது னு சொல்லிட்டாங்க , வீட்ல சும்மாதான் இருக்கேன் இப்போ "
"வேலைக்கு போகலைனா என்ன , உங்க கலையை வீட்ல காமிக்கலாமே "
ஆறுதல் படுத்துவதாய் நினைத்து சொன்னால் சந்தியா .ஆனால் பெருமூச்சு விட்டால் ஜனனீ.
"எங்க வீட்ல யாரும் என்ன மதிக்கமாட்டாங்க , ஏன் என் பசங்களே நான் சொல்றத கேட்கமாட்டாங்க , பாருங்க என் பையன் எவ்ளோ குண்டயிருக்கான் ன்னு "
" மதிக்கறதும் இல்ல , என்ன தனியா எங்கயும் வெளிய விடறதும் இல்ல , பாருங்க இந்த பசங்கள லீவ் கு ஏற்காடு ல இருக்க மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வர இந்த பாட்டிய என் துணைக்கு அனுப்ச்சிருக்காங்க . பேருக்கு தான் நான் பெரிய வீட்டு மருமக , வெற்றிகரமான காதல் திருமணம் எல்லாம் அதோட விலை என் சுதந்திரம் னு அப்போ தெரியல "
அவளுக்கு துணையாக அனுப்பிய பாட்டிக்கு தான் துணை தேவைப்பட்டிருந்தது . இதற்கு சந்தியாவாள் எதுவும் சொல்ல முடியவில்லை ,
" ஏற்காடு எப்படி இருந்தது , நல்ல இருந்ததா " என்று மட்டும் கேட்டு வைத்தாள்
"ஹ்ம்ம் நல்லா இருந்திச்சு இந்த குழந்தைங்க தான் நல்ல ஆட்டம் போட்டுச்சு "
" என் வாழ்க்கை இப்டி ஆகும் னு நான் நினைக்கலை , என்ன தான் சுதந்திரம் சதவிகிதம் னு பேசினாலும் அடுப்படி தான் நமக்கு , நான் வீட்ட விட்டு கடைக்கு கூட தனியா போனதில்ல எல்லாத்துக்கும் ஒரு ஆள் துணைக்கு வருவாங்க "
"ஆனா நானும் வீட்ட விட்டு வெளிய எடத்துக்கு வரணும் னு ஆசை படறேன் ,எவ்ளோ நாள் தான் வீட்டுக்குள்ளயே இருக்கறது "
பதில் எதிர்பாராமல் பேசிக்கொண்டேயிருந்தாள் ஜனனீ .
"ஹ்ம்ம் , சரி தான் " என்று சொன்ன சந்தியாவிற்கு தன் சுதந்திரம் இப்பொழுது தான் புரிய வந்தது . தான் வேலைக்கு போவது , வெளிஇடங்களுக்கு சுதந்திரமாய் சுற்றுவது , விரும்பியதை வாங்குவது என்று தானே இருக்கிறாள் . தாய் வீடு மீது கணவன் காட்டும் வெறுப்பு மட்டும் தானே அவளை கலங்கவைத்துக் கொண்டிருந்தது . தன்னையும் அறியாமல் கண்மூடியவள் அப்பொழுதுதான் பல உண்மைகளை அறியலானாள்.
இரயில் நிலையத்தில் வண்டி நின்றதும் , ஜனனீ யை கூட்டிச்செல்ல அவன் கணவன் வந்திருந்தான் . எத்தனை புலம்பி இருந்தாலும் அவனை பார்த்ததும் மலராய் மலர்ந்தாள் , சிரித்துக்கொண்டே அவனோடு நடை இட்டாள் .

சந்தியா தனது வீட்டுக்குள் நுழைந்ததும் ,
" வண்டி லேட்டா " என்றாள் அத்தை
"ஆமாம் அத்த " சொன்னவள் விழி பாஸ்கரனை தேடியது . உணர்ந்தாள் போல் வந்த பாஸ்கரன் சந்தியாவை சலனமற்ற பார்வையில் பார்த்தான். மெல்லியதாய் புன்னகித்தாள் சந்தியா .
அன்று அலுவலகம் சென்ற சந்தியா , மெல்ல வேலைகளை கவனிக்கலானாள் .
"சந்தியா , டி சாப்பிடலாம் வா " என்று பூஜா அழைத்தாள்
" ஏன்தான் கல்யாணம் செஞ்சிகிட்டோம் னு இருக்கு டி " என்று ஆரம்பித்த பூஜாவை பார்த்து , புன்னகையோடு பாடலானாள் சந்தியா
" உனக்கும் கீழே இருப்பவர் கோடி ,நினைத்து பார்த்து நிம்மதி தேடு !"

அம்மா இங்கே ஓடி வா !!!

அன்புள்ள அம்மாவுக்கு ,

இன்றும் பள்ளிகுச்செல்லுகையில் அடம் பிடிக்கவில்லை

மதிய உணவை மீதமின்றி உண்டேன்

பள்ளி பாடத்தை முழுமையாக எழுதிக்கொண்டேன்

விளையாட்டுப்போட்டியில் நான் முதலாக வந்தேன்

பள்ளிச்சட்டையில் கரையேதும் செய்ய வில்லை

சமத்தாக வீட்டுப்பாடம் முடித்து விட்டேன்

இன்றும் நீர்த்திரையில் தான் கண்மூடினேன்

அழகான கனவில் அன்பான நீ

முத்தம் கொடுத்து நித்திரை கலைக்கிறாய்

உணவோடு பிசைந்து அன்பை ஊட்டுகிறாய்

பள்ளிக்கு நான் செல்ல கை அசைக்கிறாய்

இல்லம் வந்ததும் கதை கேட்கிறாய்

நோயென்று நான்படுக்க நீ துவண்டுபோகிறாய்

இடிக்கு நான் ஒடுங்க அனைத்துக்கொள்கிறாய்

உன் முகம் பார்க்க எத்தனிக்கையில்

கானல் நீராய் நீ பொய்யாகிறாய்

ஏக்கம் சுமந்து நான் நிற்கிறேன்

உன் ஸ்பரிசம் வேண்டி காத்திருக்கிறேன்

என்னை தொலைத்த விலாசம் மறந்தாயோ

கடலில் விழுந்த துளிஎன்னை மீட்டெடுப்பாயோ

நம்பிகைக்காலில் தான் நான் நடக்கின்றேன்

நீ என்னை அள்ளிஎடுக்க துடிக்கின்றேன்

பரிதாபங்கள் என்னை கொல்லும்முன் வந்துவிடு

இவ்வுலகில் எனக்கும்ஓர் முகவரி தந்துவிடு

தூங்காத விழியோடு

என்றும் அன்புடன்

அம்மு

மூன்றாம் வகுப்பு

அன்னை தெரேசா அனாதை இல்லம்

மனமென்னும் கூண்டில் நானும் ஓர் குற்றவாளி (சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

வீட்டின் முற்புறம் இருக்கும் வேப்பை மரம் பல நாட்கள் என் சிரிப்பிற்கு வித்திட்டிருக்கிறது .மனதில் புயல் மையம் கொள்ளும் போதெல்லாம் தென்றலென வருடும் தோழியாய் இருந்திருக்கிறது . ஆனால் இன்று மட்டும் ஏனோ கோபப்பார்வை அதன் மேல் .

பாபு , பார்த்தவுடனேயே மனதை கவரும் காந்தப்புன்னகைக்கு சொந்தக்காரன். என்னை பொறுத்தவரை அவனொரு பல்தொழில் வித்தகன் . தன் படிப்பையும் தொடர்ந்துக்கொண்டு தன் தந்தையின் தொழிலுக்கும் தோள் கொடுக்கும் திறமை படைத்தவன் .

வீடு வீடாக சென்று துணிகளை வாங்கி வருவது , இஸ்தரி செய்யப்பட்ட துணிகளை அந்தந்த வீட்டில் சேர்ப்பது என எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவன் . மீதமாகும் தின்பண்டங்களை ஊனமான மனதோடு அவனிடம் நீட்டுகையில் கள்ளமில்லா புன்னகையோடு பெற்றுச்செல்லும் அவன் முகம் பல நாட்கள் என்னை சிந்திக்க வைத்துள்ளது .

குழந்தை பருவத்திற்கே உரிய குதூகலத்தோடு அன்று தான் அவனை பார்த்தேன் . அவன் மனதை ஒத்த வெண்மையான ஒரு பட்டத்தை எடுத்துக்கொண்டு வீதியை வலமிட்டுக்கொண்டிருந்தான் . ஏதோ ஒரு விமானத்தை இயக்குவது போல பூரிப்பு அவனிடம் , தனக்கு தோன்றிய உத்திகளையெல்லாம் காட்டினான் ,ஏனோ அவன் சிரிப்பு என்னுள்ளும் ஒரு குழந்தையை தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.

மாலையில் மலர்கள தானே வாடிப்போகும் , பாபுவும் வாடிப்போய் நின்றிருந்தான் , தீவிரவாதியிடம் மாட்டித்தவிக்கும் பிணைக்கைதியின் கவலை தோய்ந்ததாய் அவன் முகம் . பதுங்கு குழியில் இருந்து பள்ளிக்குஎன்று செல்வோம் என ஏங்கும் ஈழத்துப்பிள்ளையின் ஏக்கம் சுமந்ததாய் அவன் முகம் . வீட்டின் வாசலின் முன் நின்று மேலே பார்த்திருந்தான் . அவனருகில் சென்றேன் நான் " என்னடா , இங்க நினுக்கிட்ட என்ன பண்ற? " என்றேன் "அக்கா, பட்டம் மரத்துல மாட்டிகிச்சு கா " என்றான் . பக்கத்து பட்டறையின் பக்கமாக வளைந்திருந்த வேப்பை மரத்தின் கிளையில் மாட்டிக்கொண்டிருந்தது அந்த பட்டம் , பட்டறையின் உள்பக்கமாக சென்றால் அதை எடுப்பது சுலபமாகும் என்று பட்டது, "ஏன்டா , அந்த பக்கம் போய் பட்டத்த எடுத்துத்தரச் சொல்லலாம்ல " என்றேன் ,"போனேன் கா அந்த செக்யூரிட்டி தாத்தா திட்றாரு , ரெண்டு ரூபாய்க்கு பொவயில வாங்கியாந்து கொடு அப்பதேன் எடுத்து கொடுப்பேங்க்றார் .அப்பா ட போய் கேட்டா திட்டுவாரு " சிறு பிள்ளையிடம் கூட லாபம் பார்க்கும் அந்த கிழவரா , இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிகொடு என்று தூண்டிய மனதை அடக்கிய புத்தியா , எதுவோ மனதை கலங்க செய்ய , எதோ ஒரு கோபம் மனதில் கொப்பளிக்க அந்த இடம் விட்டு அகன்றேன் நான் !

பாபு அதிக நேரம் அங்கேயே நின்று பார்த்துகொண்டிருந்தான் .நண்பன் கையை விட்டுப்பிரிந்த அந்த பட்டமும் அவனை சேர படபடத்துக்கொண்டிருந்தது . ஏனோ பிரிந்த நண்பர்களை நிலவும் , தென்றலும் நானும் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடிந்தது .நின்று நின்று தளர்ந்து போன கால்களோடும் மனதோடும் அவன் வீடு திரும்பினான்.

காலையில் வீட்டைவிட்டு வெளியேறும் போது என்றும் போல் என்னை வருடியது வேப்பை மரக்காற்று . ஊமையான கதறலை வெளியிட்டுகொண்டிருந்தது அந்தப்பட்டம் . "உன்னிடம் ஒரு உயிர் துடித்துக்கொண்டிருக்கிரதே அப்பொழுதும் கூட உன்னால் எப்படி தென்றலை வீச முடிகிறது ? புயலென வீசி உன் கையில் துடிக்கும் பட்டதை தரை இறக்க மாட்டாயா ? இங்கே மனிதர்களெல்லாம் மரமாகி போக, மரமே நீ என்ன மனிதனாகிப்போனாயோ ? என்ன நடந்தாலும் எனகென்ன என்றிருக்கிராயே ! " ஊமையாய் கேள்விகேட்க இரண்டு நொடி மட்டுமே என்னால் ஒதுக்க முடிந்தது . அடுத்த நொடியில் , விதியின் கையில் பட்டமாய் நானும் பறந்தேன் இன்னும் எத்தனை நாட்கள் உயரம் நிரந்தரம் என்பதை அறியாமல் !

இதயம்

மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .சாலையில் கணவன் கையை கோர்த்துக்கொண்டு நடப்பதையே விரும்பாதவள் , அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் , அவள் கணவன் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . இத்தனை நெருக்கமும் அன்யோன்யமும் அவர்களுக்குள் வந்தது எப்படி ?
திருமணத்தின் மீது பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை அமுதாவிற்கு , அவளதுவேலையில் இருக்கும் சுவாரசியமும் ,ஈர்ப்பும் ஏனோ அவள் திருமண வாழ்கையில் இருப்பதாக உணர்ந்ததே இல்லை . கடமையாக மட்டுமே நினைத்த அவள் இல்வாழ்க்கையில் காதலுக்கு இடமே இருந்தது இல்லை . அவள் வளர்ந்த சூழலிற்கு முற்றிலும் மாறுபட்ட அவள் புகுந்த வீடு , அங்கு கிடைக்காத சிந்தனை சுதந்திரம் , பிடிக்காதவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் , எல்லா விஷயங்களிலும் பாஸ்கரனுடன் ஏற்படும் கருத்து வேறுபாடு , ஆசைகளுக்கெல்லாம் ஏற்பட்ட தடை எல்லாமும் அவள் திருமண வாழ்க்கையில்கசப்பை கூட்டிக்கொண்டே போயின.என்றும் அவள் எண்ணத்தில் இழந்து விட்ட அவள் சுதந்திரத்தின் சோக கீதம் தான் .. இப்படித்தான் மெதுவாய் கடந்தது ஒன்றரை வருடம் .
பாலைவனமான அவள் மனதில் பூத்தது ஒரு சந்தோசப்பூ . அவள் கர்ப்பமானதைஉறுதிப்படுத்திய அந்த நொடி , அவள் மனதுக்குள் புது உற்சாகத்தை தந்தது . பல கோடி மத்தாப்புகள் ஒன்றாய் சிரிப்பது போல் அவள் மகிழ்ந்தாள் . தனக்காகவென்றே ஒரு ஜீவன் அந்த வீட்டுக்குள் வரப்போவதை நினைதுநினைத்து பூரித்து போனாள் .அவள் வீட்டின் வானிலையே மாறிவிட்டது . அவளுக்காகவே அவள் குடும்பம் சுழன்றது . எந்நேரமும் அவளை குற்றவாளி கூண்டில் ஏற்றும் பாஸ்கரன் , அவளுக்காக பரிந்து பேசினான். பழங்களை வாங்கி குவித்தான் . அவன் கண்களிலும் அவள் கனவுகளை கண்டான் . ஒன்றாய் பல திட்டங்களை தீட்டினார்கள் . வேறுபாடில்லாத கருத்துகளை பரிமாறிக்கொண்டனர் .இல்லற வாழ்வின் சாராம்சத்தை உணர்ந்தாள் . அலுவலகத்தை விட வீடு அவளை ஈர்க்கத்தொடங்கியது . வீட்டிலேயே அதிக நேரம் களித்து மகிழ்ந்தாள் . அவள் இல்லறத்திலும் இத்தனை இன்பங்களா என்று சிலிர்த்தாள் . ஆனால் நிலைக்கவில்லை அவள் நினைப்பு .
சில நாட்களாய் தனக்கு ஏற்படும் உபாதையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றாள். ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர் சொன்ன பதில் அவளுக்குள் இடியாக இறங்கியது . கருவின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவும் , கருவிற்கு இதயம்உருவாகவே இல்லை என்றும் , இதய துடிப்பில்லாத அந்த கருவை கலைத்து விடுவது தான் அமுதாவிற்கு நல்லது என்று சொன்னார். கருவை கலைப்பது தான்அவளுக்கு நல்லதா ? அவள் வாழ்க்கையின் கருவையே அவளுக்கு உணர்த்திய அவள கண்மணியை கலைக்க வேண்டுமா ?? ஆயிரம் கேள்விகள் மின்னலாய் பாய்ந்தது .
மருத்துவரை சந்தித்து விட்டு வந்த அமுதாவின் கண்கள் குளமாகி போயின .பல ஆயிரங்கலாய் உடைந்து போனாள் அமுதா . அந்த மருத்துவமனையின் மிகுந்த கூட்டத்தின் நடுவில் பாஸ்கரனை கட்டிக்கொண்டு அழுதாள் . பாஸ்கரன் செய்வதறியாது தவித்தான். வேறு சில மருத்துவர்களிடம் அவளை அழைத்துசென்றான் . சொல்லிவைத்தார் போல் எல்லா மருத்துவர்களும் அதையேசொல்ல, முடிவை எண்ணி முடிவில்லா சோகத்தில் மூழ்கினாள் அமுதா . வானில் பறந்திருந்தவள் அகள பாதாளத்தில் ஒடுங்கியது போல் உணர்ந்தாள் .
அமுதாவின் தாய் வீட்டிற்கு போகவேண்டும் என்றாலே கடிந்து கொள்ளும் பாஸ்கரன், அமுதாவின் மனநிலை உணர்ந்து அவளை அங்கு அழைத்துச்சென்றான் . கருகலைப்பு நடந்து இரண்டு நாட்களுக்கு அவள் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டான் . யாரும் அவள் மனதை காய படுத்திவிட கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தான் . சொந்தங்களின் துக்க விசாரிப்புகள் அவளை நெருங்காது பார்த்துக்கொண்டான் .
இத்தனை இனியவனா அவள் கணவன் என்றெண்ணிய அமுதா சோக கண்ணீரும் ஆனந்த கண்ணீரும் ஒன்றாக வார்த்தாள். அதிகநேரம் அவன் மடியிலேயே சாய்ந்து கிடந்தாள் . மற்றவர்களின் வாய் ஆறுதல்களை விட , அது அவளை வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திருப்பியது . கணவனின் ஸ்பரிசத்தை அன்று தான் மனதளவில் உணர்ந்தாள் அவள் ....
இவர்களின் இதயங்களை இணைத்துவிட்டு , உறவுக்கு உயிர் கொடுத்துச்சென்ற அந்த கருவிற்கு இதயம் இல்லை என்று சொல்கிறது மருத்துவம் !

"கூளச்சி""

மனதில் ஊனம் வைத்த சிலர்
நாவில் விஷம் வைத்து
என்னை சீருகயிலும்
சூரியனிடம் குலைக்கும்
நாயை நினைத்து
சிரித்திருந்தேன் நான்

என் மனதில் வைத்த சிலர்
வேடிக்கையின் வாடிக்கையில்
என்னை " கூளச்சி "
என்று சீண்டுகையில்
ஏனோ நான் வெளியே சிரித்தாலும்
செல்லமாய் அடிப்பதாய் நடித்தாலும்
இயற்கையின் ஓரவஞ்சனையை எண்ணி
உடைந்துபோகிறது
என் மனம் மட்டும் அல்ல நம்பிக்கையும் !!

எழுதா கதை !

சொல்லாத காதலை சொல்ல துடிக்கும் காதலி
காதலனிடம் சொல்ல போகிறாள் !

சொல்லிவிட்டேன் உன் காதலை அந்த பெண்ணிடம்
நம்பிக்கையோடு காத்திரு என்று !!