ஆடைகளில் பின்னிய நினைவுகள்

 



 பழைய ஆடைகளோடு 

பழைய நினைவுகளையும்

உடுத்திப் பார்க்கிறேன்

என்னில் நான்

 

சில கறைகள்

சிரிப்பை தருகிறது

சில கறைகள்

மறைய மறுக்கிறது

 

சிலது பொருந்தும்

இன்னும் கச்சிதமாய்

சிலது பொருந்தாமல்

விலகியே நிற்கும்

 

வெண்மை மறந்த

கதைசொல்லி ஜிப்பா

வெள்ளாவி போட்டு

சரிசெய்ய வேண்டும்

  

கொடிக்கம்பி கிழித்த

நீல ரவிக்கையில்

பட்டாம்பூச்சி   பூத்தையல்

போட்டு மறைக்கவேண்டும்

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டாலும்

மரப்பெட்டியின்  ஓரத்தில்

முதுமையிலும் என்னோடு

 

சில ஆடைகள்

இன்று பொருந்தாவிட்டால்

மனமுவந்து மாலாக்காவின்

மகளுக்கு தந்திடவேண்டும்

 

ஆடைகளோடு நினைவுகளையும்

ஒழுங்குசெய்து வைக்கலாகுமோ !!

 

என்னை ஏமாற்றிவிட்டாய் 
என்றுதானே நினைத்திருந்தேன் 
என்னை ஏன் மாற்றிவிட்டாய் !!


உன் மெல்லிசை கேட்கையில்
குத்தாட்டம் போடுமென் மனது!!





உன் முகம் அறிந்தும் அறியாமல்
உன் அகம் புரிந்தும் புரியாமல்
 என் நிலை தெரிந்தும் தெரியாமல்
தன்னிலை மறந்தும் மறவாமல்
காந்தம் ஈர்த்த இரும்பாய்
கள்ளில் விழுந்த வண்டாய்
உன் குரல் கேட்ட பொழுதில்
என் மனம் வீழ்ந்திட்ட நொடியில்
மூழ்குபவனின் மூச்சுக்காற்றாய்
உறைந்தவன் ஏங்கிய அனலாய்
 கிடைத்திட்டாய் நீ எனக்கு!!

குழந்தை கையில் பொம்மை நீ
எடுத்தெரிந்தாலும் நீ வேண்டும்
 அது அணைத்துரங்கிட

விடியாதொரு இரவினில்
காணாதொரு கனவினில்
உன் குரல் ஒலி வழியில்
மதி மயங்கி செல்கின்றேன்
தோழன் தோள் சாயந்து துயில் கொள்ள
மீளாதொரு உறக்கம்....
மு(அ)கம் தெரியாதவனின் தந்தி தகவல்கள்
முழுக்க முழுக்க பொய்கள்
சிலிர்க்க வைத்த சில்மிஷங்கள்
புழுகு மூட்டை ஏனோ கணக்கவில்லை
இதயமற்ற இடத்தில் இதமாய்!!

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண்ணே !


கண்ணோடு கண்ணினை நோக்கிடு

நிமிர்ந்த நன்னடை கொண்டிடு

நீ நினைத்ததை முடித்திடு

அன்பு கொண்டு வென்றிடு

புன்னகை என்றும் சிந்திடு

புவியெங்கும் தடத்தினை பதித்திடு

புதுமையான பழமை நீ

புத்துணர்ச்சி வாசம் நீ

வெற்றிகாணும் வியுகம் நீ

வானளக்கும் விண்கலம் நீ



உன்னை நீ அறிந்திடு போதும்

தேவைபடாது 35 சதவிகிதம்